Tuesday, February 15, 2011

உச்சநீதிமன்ற நீதிபதி வாங்கிய லஞ்சம்: காங்கிரஸ் எம்.பி., பகிரங்கக் குற்றச்சாற்று மத்திய அரசின் சட்டத்துறை விசாரணைக் கமிஷன் அமைத்து ஊழல்களைக் களைய முன்வர வேண்டும்

உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் வாங்கிய லஞ்சம்பற்றி கேரள மாநில நாடாளுமன்ற காங் கிரஸ் உறுப்பினர் கே. சுதாகரன் வெளிப்படை யாகக் கூறிய குற்றச்சாற்றை எடுத்துக்காட்டி, நீதித்துறையில் நிலவும் இத்தகைய ஊழல்களைக் களைய விசாரணைக் கமிஷன் அமைக்க வேண் டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஊழலைப்பற்றி உலகறிய ஓங்காரக் கூச்சல் போடும் உச்சநீதிமன்ற நீதிபதியைப்பற்றி, கேரளத்தைச் சார்ந்த ஒரு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கே. சுதாகரன் என்பவர் மிகவும் துணிச்சலாகப் பேசியுள்ளார். அவர் கூறிய சில செய்திகள் எவரையும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் என்பது உறுதி.
உச்சநீதிமன்ற நீதிபதிமீது லஞ்சக் குற்றச்சாற்று!
கேரளாவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கொடியேறி  பாலகிருஷ்ண பிள்ளைக்கு ஒரு ஊழல் வழக்கில் ஓராண்டு தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. அவருக்கு கேரளாவில் உள்ள கொட்டரகரா  என்ற ஊரில் காங்கிரஸ் தலைமை யிலான கூட்டணி வரவேற்பு அளித்தது. அதில் பேசிய காங்கிரஸ்  எம்.பி., கே. சுதாகரன், உச்சநீதிமன்றத்தின் நீதிஅரசர் ஒருவர் லஞ்சம் வாங்கினார் என்ற பரபரப்பான குற்றச்சாற்றை சுமத்தியுள்ளார்.
மதுக்கடை பார் உரிமங்களை ரத்து செய்தது கேரள உயர்நீதிமன்றம்; அதற்கு மேல் முறையீடு செய்ததில் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் லஞ்சம் வாங்கினார் என்பதே அவரது குற்றச்சாற்று.
இதுபற்றி அவர் (கே.சுதாகரன்) மறுநாள் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு விடையளித்தபோது,
நான் சொன்ன வார்த்தையை திரும்பப் பெறப் போவ தில்லை; அது உண்மை; ஆனால் என்னிடம், அதற்கான ஆதாரம் இல்லை. உண்மையில் நடந்ததைத்தான் சொன்னேன். இது பல விஷயங்களை உள்ளடக்கியது; நீதிபதிகளும், தீர்ப்புகளும் எக்காலத்திலும் சுதந்திரமாக இருந்ததில்லை; சில சந்தர்ப்பங்களில் நிர்ப்பந்தங்கள் வந்திருக்கலாம். இந்தக் குற்றச்சாற்றை நிரூபிக்க முடியாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்பதும் எனக்குத் தெரியும். அதே சமயத்தில்  நீதி விசாரணைக் கமிஷன் அமைத்தால் அதன்முன் சாட்சியம் அளிக்க நான் தயாராக இருக்கிறேன். எந்த இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்பதுபோன்ற விவரங்களை வெளியிடுவேன் என்றார் சுதாகரன்.
லஞ்சம் கொடுத்ததை நேரில் பார்த்தார்
உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கினை நான் சந்திக்கிறபோதுதான் ஒரு நீதிபதியைப் பற்றி எனது வழக்கறிஞர் நண்பர் கூறினார். நான் நம்பவில்லை. கடைசியில் ஒரு நிகழ்வை நானே நேரில் பார்த்தேன். கண்ணால் கண்டபின்தான் நம்பினேன். லஞ்சம் வாங்கிய அதே நீதிபதி பின்னர் ரூ.1.5 லட்சம் வேண்டும் என்று ஒரு ஆள்மூலம் கேட்டார் என்றும் சுதாகரன் கூறியுள்ளார்.
ரூ.21 லட்சம் லஞ்சம்
கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை ரத்து செய்ய ஒரு நீதிபதி ரூ.21 லட்சம் லஞ்சம் வாங்கினார் என்று சுதாகரன் எம்.பி. கூறிய இந்தத் தகவல்கள் பற்றி வழக்குரைஞர்கள்  - நீதிமன்ற அவமதிப்பு போட்டால் சரியாகிவிடாது. மத்திய சட்டத் துறை ஒரு விசாரணைக் கமிஷனை அமைப்பது நல்லது; பொதுவான வகையில் நீதித்துறை பற்றியும் அண்மைக் காலத்தில் அதுபற்றிய பல புகார்கள் ஓய்வு பெற்ற பல தலைமை நீதிபதிகள் குறிப்பாக சபர்வால் என்பவர் ஓய்வு பெறுவதற்கு முன் தந்த சில தீர்ப்புகள் பற்றியும், திரு. பாலகிருஷ்ணன் அவர்கள்பற்றிய பல குற்றச்சாற்றுகளும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரால் கூறப்பட்டுள்ளதும் நீதித்துறையின்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெகுவாக கீழிறக்கத்திற்குக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீதித்துறை ஊழல்களையும் கண்டறிய வேண்டும்
எனவே இதுபற்றி மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டு மானால்  - ஊழல், நிருவாகத் துறையிலும், சட்டத் துறையிலும் (Executive Legislature)  உள்ளதுபோலவே நீதித்துறையாக இருந்தாலும் (Judiciary)  அதனையும் கண்டறிந்து களைய வேண்டும்.
பல நேரங்களில் நீதிபதிகள் தங்கள் எல்லைகளைத் தாண்டிப் பேசுவதும் கமெண்ட் அடிப்பதும், பிறகு மாற்றிச் சொல்வதும் நீதித்துறையின் ஓர்ந்து கண்ணோட் டமின்றி தேர்ந்து நீதி செலுத்துவதைப் பாதிப்பதாகும்.
நீதிபதிகள் பிராசிகியூட்டர்களாக மாறக் கூடாது
நீதிபதிகள் நீதிபதிகளாக அமர்ந்து தீர்ப்பளிக்க வேண்டுமே தவிர, அவர்கள் பிராசிகியூட்டர்களா கவோ அல்லது  விசாரணை நடத்தும் போலீஸ்காரர் களாகவோ, குற்றம் சுமத்துபவர்களாகவோ ஆகா மல், சாற்றப்பட்ட குற்றத்தின் தன்மையை நடுநிலை யோடு, சொந்த விருப்பு வெறுப்பு, குரோதம், உள் நோக்கம் ஆகியவைகளுக்கு ஆளாகாமல் தீர்ப்பு களை வழங்குவதன் மூலம்தான் உயரிய கடமையை அவர்கள் ஆற்றியவர்கள் என்ற நன்னம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.
மத்திய அரசு அலட்சியப்படுத்தக் கூடாது
ஆட்சியின் முப்பெரும் பிரிவுகளும் ஒன்றை ஒன்று புரிந்து, செயல்பட வேண்டியதே - எல்லை மீறாமல் பணிபுரிவதே - சீரிய ஜனநாயகம் தழைக்க ஒரே வழியாகும். நீதி தேவதை சிலைக்குக் கண்ணைக் கட்டினால் மாத்திம் போதாது; நீதியரசர்களின் கண்களும் கட்டப் பட்டு, கருத்துக் கண்கள் மட்டுமே திறந்த மனதுடன் தாள்களில் எழுதும் தீர்ப்புகளில் காட்ட வேண்டிய மகத்தான பொறுப்பு உண்டு.
மத்திய அரசு எம்.பி.,யின் குற்றச்சாற்றை அலட்சியப் படுத்தாமல் நீதித்துறை மாண்பினைக் காத்திட வேண்டும். ஏனெனில் நீதித்துறைதான் ஜனநாயகத்தில் மக்களின் கடைசி நம்பிக்கையாகும்.
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

0 comments:

Post a Comment