பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியதோடு நம் கடமை முடிந்துவிடாது. களப் பணியிலும் இறங்குவோம்; பிரச்சாரத்திலும் ஈடுபடுவோம். தி.மு.க. ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.
திராவிடர் கழகப் பொதுக்குழு கூட்டம் சென்னை - பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் நேற்று காலை சரியாக பத்து மணிக்குத் தொடங்கப்பட்டது.
திராவிடர் கழக மகளிரணி பாசறை செயலாளர் பொறியாளர் கனிமொழி கடவுள் மறுப்புக் கூறியபின், முதலாவ தாக இரங்கல் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. இத்தீர்மானத்தைக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் முன்மொழிந்தார். அனை வரும் எழுந்து நின்று இரு மணித் துளிகள் அமைதி காத்தனர்.
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா. வில்வநாதன் அனைவரையும் வரவேற்று உரையாற் றினார்.
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா. வில்வநாதன் அனைவரையும் வரவேற்று உரையாற் றினார்.
பொதுக் குழுக் கூட்டத்திற்கு கழகச் செயலவைத் தலைவர் ராஜகிரி கோ. தங்கராசு தலைமை வகித்தார்.
2010 அக்டோபர் 21ஆம் தேதி வேலூர் - திருப்பத்தூரில் சிறப்பாக நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவுக்குப்பின் இடைப்பட்ட 5 மாதங்களில் கழக நடவடிக்கைகள், நாட்டு நடப்புகள் பற்றி விளக்கினார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன்.
தொடர்ந்து தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் கடந்த கால கழகச் செயற்பாடுகள் குறித்தும், அடுத்து கழகம் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.
மாணவர் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து மாநில மாணவரணி செயலாளர் ரஞ்சித்குமார் எடுத்துரைத்தார். இளைஞரணி மாநிலச் செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார், இளைஞரணி செயல்பாடுகளை விளக்கிக் கூறினார்.
தீர்மானங்கள்
கழகத் துணைப் பொதுச் செயலாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் தீர்மானங்களை முன்மொழிந்தார் பலத்த கரவொலி மூலம் தீர்மானங்கள் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டன.
தமிழர் தலைவர் முன்மொழிந்த தேர்தல் பற்றிய தீர்மானம்
நடக்க உள்ள தமிழ்நாடு 14ஆவது சட்டப் பேரவைத் தேர்தலில் திராவிடர் கழகத்தின் முடிவு என்னும் இரண்டாவது தீர்மானத்தைக் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் முன்மொழிந்து விளக்கிப் பேசினார்.
தன்னிறைவு மிக்க (Self Explanatory) தீர்மானமாக அது அமைந்திருந்தது. 1) பரம்பரை யுத்தம் என்று ஜெயலலிதா சொன்னதன்மூலம் ஆரியர் - திராவிடர் போராட்டம் என்பது உறுதிப் படுத்தப்பட்ட ஒன்றாகும்.
2) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தின் மூலம் தீண்டாமை ஒழிப்பு - ஜாதி ஒழிப்புக்கான செயல்பாடுகள்.
3) நீஷ பாஷை என்று சங்கராச்சாரியாராலும், பார்ப்பனர் களாலும் கொச்சைப்படுத்தப்பட்ட தமிழ் மொழிக்குச் செம்மொழி தகுதியைத் தேடி தந்த தகைமை.
பண்பாட்டுப் படையெடுப்பு முறியடிப்பு
ஆரியப் புராணக் கதைகளின் அடிப்படையில் ஆண் கடவுள்களான நாரதனும் - கிருஷ்ணனும் புணர்ந்து பெற்ற 60 பிள்ளைகள்தான் பிரபவ தொடங்கி அட்சய என முடியும் 60 வருடங்கள்தான் தமிழ் வருடங்கள் என்னும் ஆபாச ஆண்டு பிறப்புகளைத் தூக்கி எறிந்து தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் இயற்றிய இலட்சிய நோக்கு. இவையெல்லாம் பார்ப்பனப் பண்பாட்டுப் படை யெடுப்பை முறியடித்த ஆட்சி தி.மு.க. ஆட்சியின் சாதனைகளாகும்.
பெண்களுக்கான முன்னேற்றத் திட்டங்கள்
4) பெண்கள் நலன் என்கிறபோது தி.மு.க. ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டங்களும், திட்டங்களும் அசாதாரண மானவை. பெண்களுக்குச் சொத்துரிமை, திருமண உதவித்திட்டம் , கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு உதவித்தொகை, திருநங்கையர்களுக்குத் தனி வாரியம், அனாதை விதவைகளுக்கு நிதி உதவி, ஆயிரக் கணக்கான சுய உதவி குழுக்கள் என்று அலை அலையான திட்டங்களின் அடிப்படையிலான செயல் ஊக்கங்கள் மூலம் மகளிர் உரிமை ஆட்சி மாண்பமை;
5) எண்ணற்ற கல்வி நிறுவனங்கள், மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள், நுழைவுத் தேர்வு ரத்து, பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி என்று கல்விப் புரட்சியை நடத்தி வரும் சாதனை.
6) விவசாயிகளுக்கு 7,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி, பயிர்ப் பாதுகாப்பு, அசலை முறையாகச் செலுத்திய வர்களுக்கு கூட்டுறவுக் கடன் வட்டி தள்ளுபடி செய்த ஈர நெஞ்சம்.
பசிப்பிணியை ஒழித்த பாங்கு
7) உண்ண உணவு - ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, மலிவு விலையில் மளிகைச் சாமான்கள், 21 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் இவற்றின் மூலம் பசி என்னும் பொல்லாக் கொடுமையை ஒழித்துக் கட்டி, ஓட்டையில்லா இல்லத்தில் வாழ வைத்த கருணையுள்ளம்.
8) உடல் நலமே மிகச் சிறந்த செல்வம் (Health is Wealth). அந்த அடிப்படையில் வருமுன் காக்கும் திட்டம், வந்தபின் உயிர்களைக் காக்க 108 எண் அவசர ஆம்புலன்ஸ் உதவி, கலைஞர் உயிர் காக்கும் திட்டம் இவற்றின் மூலம் மக்கள் உயிர் பாதுகாக்கும் பொறுப்புணர்வு.
9) ஒரே ஆணையில் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர்களை வீட்டுக்கு அனுப்பியது முந்தைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சி. ஆனால் கலைஞர் ஆட்சியிலோ புதிய புதிய வேலை வாய்ப்பு, மத்திய அரசின் ஆறாவது சம்பள கமிஷன் ஊதிய விகிதத்தை அப்படியே ஏற்றுக் கொண்ட நிலை. எல்லார்க்கும் எல்லாம் என்ற சமதர்ம ஆட்சி என்பதற்கு அடையாளமாக தி.மு.க. ஆட்சி ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது.
சமத்துவ - சமதர்ம ஆட்சியன்றோ!
அத்தகைய சமத்துவ, சமதர்ம சமவாய்ப்பு ஆட்சி தொடர வேண்டும் என்பதைக் காரண காரியத்துடன் விளக்கியது திராவிடர் கழகத்தின் சட்டப் பேரவைத் தேர்தல் குறித்த தீர்மானமாகும்.
1971இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலின்போது ராமன் படத்தை செருப்பால் அடித்த தி.க. ஆதரித்த தி.மு.க.வுக்கா ஓட்டு என்று பார்ப்பனர்கள் பிரச்சாரம் செய்தார்கள். முடிவு என்னாயிற்று? 1967 தேர்தலில் 138 இடங்களை தி.மு.க. பெற்றது என்றால், 1971 தேர்தலில் 183 இடங்களைப் பெற்று வாகை சூடியது.
இனவுணர்வைச் சீண்டினால்..
இனவுணர்வைச் சீண்டும் வகையில் அமைக்கப்படும் எந்தக் களத்திலும் தந்தை பெரியார் ஊட்டிய இனவுணர்வு தான் வெற்றிச் சிம்மாசனத்தை அலங்கரிக்கும் என்பது தமிழ்நாட்டில் நிரூபிக்கப்பட்ட வரலாறாகும்.
நடக்க இருக்கும் தமிழகத் தேர்தலையும் அந்த நிலைக்குப் பார்ப்பனர்கள் தள்ளியுள்ள நிலையில் நடப்பது வெறும் தேர்தல் அல்ல; ஆரியர் - திராவிடர் போராட்டமே என்று திராவிடர் கழகப் பொதுக் குழுவின் தீர்மானம் முரசொலித்துக் கூறுகிறது. இந்தவகையில் தீர்மானத்தின் சிறப்பை விளக்கிக் கூறினார் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள். சமுதாய இயக்கமான திராவிடர் கழகம் அரசியலையும் அதன் குழந்தையான தேர்தலையும் சமுதாய நோக்கில்தான் பார்க்கும். தந்தை பெரியார் காலத்திலும் இதே அணுகுமுறைதான் - அதுதான் இப்பொழுதும் தொடர்கிறது.
மக்கள் பின்னால் போகாதவர்கள்
மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைச் சொல்வதல்ல நமது வேலை. மக்களுக்கு எது தேவையோ அதனைச் சொல்லுவதுதான் என் வேலை என்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.
தேர்தல் குறித்து தான் வெளியிட்ட அறிக்கை குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக் கூறினார். வெளிநாட்டுத் தமிழர்களிலிருந்து உள்நாட்டுத் தமிழர்கள் வரை அதனை வரவேற்றனர்.
நம்மை யாரும் அலட்சியப்படுத்த முடியாது!
நம்மை இருட்டடிக்கும் ஏடுகள்கூட அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நம்மை யாரும் அலட்சியப்படுத்திவிட முடியாது.
தேர்தலில் நிற்பவர்கள் கூறும் கருத்தைவிட, தேர்த லுக்கு நிற்காத நாம் கருத்துக்கு தமிழ் மக்களிடத்தில் கூடுதல் மதிப்பும், வரவேற்பும் உண்டு என்று கூறிய கழகத் தலைவர் தந்தை பெரியார் தந்த புத்தியை நாம் பின்பற்றுவதால், நமக்குத் தடுமாற்றம் இல்லை - எதையும் துணிவாகவும் கூற முடிகிறது என்றார்.
நாம் சொன்ன ஒரு கருத்தினை ஏற்கவில்லை என்ப தற்காக நாம் குறை காண வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நிற்கும் அந்தக் காலத்திலே ராஜதந்திரங்கள் தேவைப்பட்டிருக்கக் கூடும். இன்று இருக்கும் தேர்தல் என்பது கூட்டணி அரசியல் ஆகிவிட்டது.
எதிர் அணி வகுக்கும் திட்டத்தைக் கண்காணித்து, யூகங்களை வகுக்கும் நிலை அரசியல் கட்சிகளுக்கு ஏற்படுவதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
கூட்டணி அரசியல்
கட்சிகள் தனித் தனியே நின்று வாக்குகளைப் பெற்ற அடிப்படையில் (Proportionate Representation) பிரதிநிதித்துவம் என்ற நிலை ஏற்பட்டால், இந்தக் கூட்டணி அரசியலுக்கு வேலையில்லாமற் போய்விடும். அந்த நிலை ஏற்படாத வரை இந்த நிலை என்பது தவிர்க்கப்பட முடியாததாகும். யார் வர வேண்டும் என்று நாம் கருதுகிறோமோ, அதைக் கருதி அவர்களோடு கூட்டுச் சேர்ந்தவர்களையும் ஆதரிக்க வேண்டிய நிலையை தமிழர் தலைவர் வகுப்பறைப் பாடம் போல நடத்தினார்.
(காமராசர் முதல் அமைச்சராக வர வேண்டும் என்பதற் காக அவரால் நிறுத்தப்பட்ட பார்ப்பன வேட்பாளர்களை ஆதரிக்கச் சொல்லவில்லையா தந்தை பெரியார்?)
நம் ஆயுதத்தைத் தீர்மானிப்பவன் யார்?
நம் ஆயுதத்தைத் தீர்மானிப்பவன் யார்?
நம் கையில் உள்ள ஆயுதத்தை எதிரிதான் தீர்மானிப்பான் என்பதை மறந்துவிடக் கூடாது.
திராவிடர் கழகம் ஆதரித்தால் அவர்கள் தோற்றுவிடு வார்கள் என்று சொன்னவர்கள் உண்டு. திராவிடர் கழகம் ஆதரிப்பவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள் என்பதுதான் உண்மை என்று தமிழர் தலைவர் சொன்னபொழுது பலத்த கரவொலி! தீர்மானம் நிறைவேற்றியதோடு நம் கடமை முடிந்து விடாது. களப்பணியையும் செய்வோம் - பிரச்சாரமும் செய்வோம் - வெற்றி நமதே! என்றார் கழகத் தலைவர்.
தோழர்களின் கருத்துரை
திராவிடர் கழக சட்டத்துறைத் தலைவர் கி. மகேந் திரன், திராவிடர் கழக மகளிர் பாசறைத் தலைவர் டெய்சி மணியம்மை, மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா. நேரு, பொதுச் செயலாளர் வீ. குமரேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ச. இன்பலாதன், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, தென் மண்டல பிரச்சாரக் குழுத்தலைவர் தே. எடிசன்ராஜா, தஞ்சை மண்டல திராவிடர் கழகத் தலைவர் வெ. செய ராமன், துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, கழகப் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு, பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை ஆகியோர் உரையாற்றினர். தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி நன்றி கூறிட, பொதுக் குழு பிற்பகல் 1. 30 மணிக்கு நிறைவுற்றது. அனைவருக்கும் மதியம் புலால் விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.
தொகுப்பு: மின்சாரம்
ஊழலைப்பற்றிப் பேசுவோர் யார்?
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று சிலர் கூப்பாடு போடுகிறார்கள். கேட்டால் அது யூகத்தின் அடிப்படையில் (Presumptive) என்கிறார்கள். யூகத்தின் அடிப்படை என்றால் அதன் பொருள் என்ன?
இரவில் கனவில் ராஜகுமாரியைக் கல்யாணம் செய்து கொண்டவன், பொழுது விடிந்தவுடன் அந்த ராஜகுமாரி எங்கே எங்கே என்று தேடி ஓடினானாம். அதுபோன்றதுதான் இவர்கள் கூறும் யூகத்தின் அடிப்படையிலான ஊழல் - அதையாவது எல்லோரும் ஒரே மாதிரியாகக் கூறுகிறார்களா? அவரவர்களும் அவர்கள் இஷ்டத்துக்கு - மனதிற் தோன்றியபடி, கற்பனைக்கு எட்டியபடி கூறுகிறார்கள்.
ஊலைப்பற்றிப் பேசுவோர் யார்? இன்றைக்கும் நீதிமன்றத்தில் ஊழல் வழக்கில் நிற்பவர்கள் பேசலாமா? சினிமாக்காரர்கள் ஊழலைப்பற்றிப் பேசலாமா? கறுப்புப் பணம் வாங்காத நடிகர் உண்டா?
பொது மக்களைப் பார்த்துக்கூட தந்தைபெரியார் கேட்டாரே!
ஊழலைப்பற்றிப் பேச உனக்கு யோக்கியதை உண்டா? நீ பணம் வாங்கிட்டுதானே ஓட்டுப் போட்டாய்? இந்த யோக்கியதையில் உள்ள நீ ஊழல், லஞ்சம் பற்றிப் பேசலாமா? என்று கேட்டாரே தந்தை பெரியார்.
தேர்தலில் நிற்கிறவர்கள் இந்த அளவுக்குத்தான் செலவு செய்ய வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. தேர்தல் முடிந்தபிறகு தேர்தல் ஆணையத்துக்கு கணக்குக் கொடுக்கிறார்களே - அது உண்மையான கணக்குத்தானா?
தேர்தல் ஆணையம் விதித்துள்ள அந்தத் தொகைக்குள் மட்டும் தான் செலவு செய்கிறார்களா? இப்படிப்பட்டவர்கள்தான் ஊழலைப்பற்றி யெல்லாம் வாய் மணக்கப் பேசுகிறார்கள்
தேர்தல் ஆணையம் விதித்துள்ள அந்தத் தொகைக்குள் மட்டும் தான் செலவு செய்கிறார்களா? இப்படிப்பட்டவர்கள்தான் ஊழலைப்பற்றி யெல்லாம் வாய் மணக்கப் பேசுகிறார்கள்
- திராவிடர் கழகப் பொதுக் குழுவில் தமிழர் தலைவர் (14.3.2011)
பிரச்சாரத் திட்டம்
தேர்தல் பிரச்சாரத்தை திராவிடர் கழகம் தனி மேடையில் மேற்கொள்ளும் அப்பொழுதுதான் நம் கருத்துகளை முழுமையாக நாம் எடுத்துக் கூற முடியும் என்று கூறிய தமிழர் தலைவர் அவர்கள், எந்தக் காரணத்தை முன்னிட்டும் தனி நபர் விமர்சனம் இடம் பெறக்கூடாது என்றும் கறாராகக் குறிப்பிட்டார். மூன்று குழுக்கள் இந்தப் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ளும் என்றார். பேச்சாளர்கள் கூட்டம் தஞ்சை, வல்லத்தில் வரும் 20ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவித்தார்.
தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் தலைமையில் துணைப்பொதுச்செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பேராசிரியர் ப.சுப்பிரமணியம் ஆகியோர் அந்தத் திட்டத்தை வகுத்துச் செயல்படுத்துவார்கள் என்றும் குறிப் பிட்டார். கழகத் தலைவர் மேற்கொள்ளும் பிரச்சாரக் குழுவில் பொதுச்செயலாளர் சு. அறிவுக்கரசு இடம் பெறுவார் என்றும் கழகத் தலைவர் அறிவித்தார். திமுக ஆட்சியின் சாதனைகள் எனும் தலைப்பில் கழகத்தின் சார்பில் நூல் ஒன்று வெளியிடப்படும். அதற்கான பொறுப்பை கழகப் பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன் கவனிப்பார் என்றும் கூறினார் கழகத் தலைவர்.
வி.ஜி. இளங்கோவன்
வேலூர் - திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளராக வி.ஜி. இளங்கோவன் நியமிக்கப்படு வதாகப் பொதுக்குழுவில் கழகத் தலைவர் அறிவித்தார்.
சந்தாக்கள் குவிந்தன!
சால்வைக்குப் பதிலாக சந்தாக்களை அளிப்பீர் என்று திராவிடர் கழகத் தலைவர் சொன்னதுண்டு அதனைப் பின்பற்றிக் கழகத் தோழர்கள் வரிசையாக வந்து விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சுகளுக் கான சந்தாக்களை அளித்தனர்.
வெற்றிச்செல்வன்
திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் அ. சற்குணன் - ஆஷா ஆகியோரின் ஆண் குழந்தைக்கு வெற்றிச்செல்வன் என்று பெயர் சூட்டினார் கழகத் தலைவர்.
தேர்தல் வெற்றிக்கான அச்சாரப் பெயர் இது என்று கழகத் தலைவர் சொன்னபொழுது பெரும் வரவேற்பு.


0 comments:
Post a Comment