Wednesday, March 9, 2011

பேரணி என்னும் பேராறு! இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

தஞ்சை, மார்ச் 6- தஞ்சை மண்டல திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டையொட்டி பட்டுக்கோட்டையில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி 5.3.2011 சனி மாலை 5.30 மணிக்கு பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக வழக்குரைஞர் அணியின் தலைவர் அ.அண்ணாதுரை அவர்களின் தலைமையில் புறப்பட்டது.
புலவஞ்சி இராமையன், மல்லிகை வை.சிதம்பரம் ஆகியோர் கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார்கள். தோழர் முத்துதுரைராசன் பி.ஏ., இரா.இளவரசன் எம்.ஏ., பி.எட்., அல்லூர் இரா.பாலு, அழகியமணவாளன் பி.ஏ., நா.எழிலரசன், து.அண்ணா துரை, அ.இளங்கோவன், இரா.மோகன்தாஸ் எம்.ஏ., பி.எட்., ஆகியோர் பேரணிக்கு முன்னிலை வகித்தனர்.
இருவர் இருவராகப் பெரியார் பிஞ்சுகள், மகளிரணி, இளைஞரணி மற்றும் கழகத் தோழர்கள் கழகக்கொடி ஏந்தி அணிவகுத்து நின்றனர்.
தலைமைக் கழகத்தால் அச்சிட்டு வழங்கப்பட்ட முழக்கங்களைத் தோழர்கள் முழங்கினர். திருவாரூர் சு.சிங்காரவேலு, மாங்காடு மணியரசன், ஆகியோர் பேரணி பற்றி முன்னெடுத்து முழங்கிச் சென்றனர்.
மகளிர் தீச்சட்டி
வீ.கலைவாணி, அல்லிராணி, வேதவள்ளி, முருகம்மாள், பாக்யா, ரக்வுந்நிஷா ஆகிய கழக மகளிரணி தோழியர்கள் தீச்சட்டி ஏந்தி கடவுள் மறுப்பு முழக்கங்களை முழங்கி வந்தனர்.
கூரிய அரிவாள் மீது...
கோயில் பூசாரிகள் அரிவாள் மீது ஏறி நின்று சாமி சக்தி என்று பூச்சாண்டி காட்டுவார்களே- அந்த மூடநம்பிக்கையை உடைத்தெறியும் வண்ணம் பெரியார் பிஞ்சுகள் முதல் அரிவாள் மீது ஏறிநின்று கடவுள் மறுப்பு முழக்கமிட்டது கண்டு பொதுமக்கள் அதிர்ந்து போனார்கள்.
சோம.நீலகண்டன், புலவஞ்சி அண்ணாதுரை, பட்டுக்கோட்டை ராஜ்குமார், ஆலங்குடி கருணாகரன், பாலகிருஷ்ணாபுரம் மகாராஜா, பேராவூரணி ரவி, பெரியார் பிஞ்சு சுதர்சன் (குப்பக்குடி), புதுக்கோட்டை அகிலா, கறம்பக்குடி முத்து முதலியோர் பளபளக்கும் கூரிய அரிவாள் மீது ஏறிக் காட்டினர்.
மல்லிப்பட்டினம் முருகானந்தம், படப்பைக்காடு அருண்பாண்டியன், எட்டுபுலிக்காடு பாலையன் ஆகியோர் நாக்கில் அலகுகுத்தி வந்தனர்.
அலகுக் காவடி
செயங்கொண்டம் கே.பி.கலியபெருமாள், கே.எம்.சேகர் ஆகியோர் அலகுக் காவடி எடுத்து வந்தனர். காளையார்கோவில் நாராயணசாமி, குழுவினர் பகுத்தறிவுப் பாடல்கள் பாடி கோலாட்டம் அடித்து வந்தனர்.
அலகு குத்தி கார் இழுத்தல்
மதுக்கூர் சுரேந்தர், தஞ்சை சிவகாமி நகர், கார்த்திக், சேதுபாவாசத்திரம் பெரியசாமி ஆகியோர் முதுகில் அலகுக் குத்தி அம்பாசிடர் காரை இழுத்து வந்ததோடு கடவுள் மறுப்பு முழக்கங்களை எழுப்பிப் பார்வை யாளர்களை ஆச்சரியக்குறியில் ஆழ்த்தினர்.
தமிழர் வீர விளையாட்டு
சிலம்ப விளையாட்டு, சுருள் கத்தி செயல்பாடு, நாக்கில் சூடம் கொளுத்துதல் ஆகியவற்றை கறம்பக்குடி முத்து, கே.சண்முகசுந்தரலிங்கம், கே.குமரேசன் ஆகியோர் இடை இடையே மெய்சிலிர்க்கச் செய்துகாட்டி பொது மக்களை ஈர்த்தனர். தஞ்சாவூர் வெட்டிப்பாளையம் எம்.எம்.மதியழகன் குழுவினர் தப்பாட்டம் மூலம் தூள் பரப்பினர்.
பேரணியின் இருமருங்கிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு, திருவிழா சென்று பார்ப்பது போல் பார்த்தனர். இந்த மூடநம்பிக்கை ஒழிப்புச் செயல்பாடுகளை அதிசயமாகப் பார்த்தனர். பெண்கள், தீச்சட்டி இங்கே-மாரியாத்தாள் எங்கே? என்று முழக்கமிட்டபோது பார்வையாளர்கள் பகுதியில் இருந்த பெண்களுக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை.
அஞ்சாநெஞ்சன் அழகிரி சிலையில் தொடங்கி பெரிய தெரு, சின்னையா தெரு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சாலை, அதிரை சாலை, பழனியப்பன் தெரு, தலையாரித் தெரு, காளியம்மன் கோயில் தெரு, அறந்தாங்கி முக்கூட்டு, தஞ்சை சாலை, சவுக்கண்டித் தெரு, பிள்ளையார் கோயில் தெரு வழியாக மாநாடு தொடங்கும் இடத்தைப் பேரணி வந்தடைந்தது. பேரணியின் மொத்த நீளம் 5 கிலோ மீட்டராகும்.
கோயில் திருவிழாக்களையும், அது தொடர்பான நிகழ்ச்சிகளையும் பார்த்திருந்த பொதுமக்களுக்கு- திராவிடர் கழகத்தினர் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி வித்தியாசமாகவும் சில அதிர்ச்சியாகவும் இருந்தது என்பது உண்மை-அதே நேரத்தில் இளை ஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்றே கூற வேண்டும்.
http://viduthalai.in/new/home/dravidar-kazhagam/99-propoganda/4829-2011-03-06-09-14-55.html

0 comments:

Post a Comment