Sunday, March 6, 2011


கிரீமிலேயரை நீக்குக! 50 சதவிகிதம் என்ற எல்லையை மாற்றுக!
பிற்படுத்தப்பட்டோருக்கு நாடாளுமன்ற நிலைக் குழுவை அமைத்திடுக!

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் திணிக்கப்பட்டுள்ள பொருளாதார அளவுகோலை நீக்க வேண்டும் என்றும், 50 விழுக்காட்டுக்குமேல் இடஒதுக்கீடு போகக் கூடாது என்ற உச்சநீதிமன்ற வரையறையை அகற்ற வேண்டும் என்றும், பிற்படுத் தப்பட்டோருக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று வலி யுறுத்தியும் டில்லியில் பெரியார் மய்யத்தில் நடை பெற்ற சமூகநீதிக் கருத்தரங்கில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. டில்லி ஜெசோலா பகுதியில் உள்ள பெரியார் மய்யத்தில் நேற்று (3.3.2011) வியாழக்கிழமையன்று சமூக நீதிக் கருத்தரங்கு மிகவும் சிறப்பாக நடந்தேறியது.

இக்கருத்தரங்கைக் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகள் இணைந்து நடத்தின.

திராவிடர் கழகம்

சமூக நீதிக்கான வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு

டில்லி பல்கலைக் கழக சமூக நீதிக் கல்விப் பேரவை

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக அகில இந்திய பிற்படுத்தப்பட்ட மாணவர் கூட்டமைப்பு

பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கங்களின் அகில இந்திய கூட்டமைப்பு ஆகியவை சார்பில் நடத்தப்பட்டது. காலை 11 மணி அளவில் தொடங்கிய இக்கருத்தரங் கிற்கு திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தருமான முனைவர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்தார்.

பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கங்களின் அகில இந்திய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி வரவேற்புரையாற்றினார்.

பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் நீதியரசர் எம்.என்.ராவ் அவர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

சமூக நீதியும், அதில் பெரியார் இயக்கத்தின் பங்களிப்பும் என்ற தலைப்பில் அமெரிக்க நாட்டின் பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் பேரா சிரியர் இலக்குவன் எஸ். தமிழ் சிறப்புரையாற்றினார்.

மதிப்பிற்குரிய விருந்தினர்களாக மக்களவை தி.மு.க. கொறடாவான டி.கே.எஸ். இளங்கோவன், மாநிலங் களவை தி.மு.க. கட்சித் தலைவர் திருச்சி சிவா, நாடாளுமன்ற உறுப்பினர் உபேந்திர குஷ்வாஹா, பிற்படுத்தப்பட்டோர்க்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் எஸ்.கே.கார்வேந்தன், சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் அறங்காவலர்களும், மூத்த வழக்கறிஞர்களுமான பேரா. ரவிவர்வகுமார், ஏ.சுப்பாராவ், பத்திரிகையாளர் திலீப் மண்டல், முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் டி.பி.யாதவ், பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கங்களின் அகில இந்திய கூட்டமைப்பின் செயல் தலைவர் எம். கங்கையன், டில்லி பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் முனைவர் கேதார் மண்டல், முனைவர் பார்த்தசாரதி, மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக அஞ்சையா ஆகியோர் மாநாட்டில் உரையாற்றினர். தீர்மானங்கள்

இந்த மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:

கீழ்க்குறிப்பிடப்பட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

1) கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட் டோருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப் படுவதை மேற்பார்வையிட இதர பிற்படுத்தப்பட்டோர்க் கான நாடாளுமன்றக் குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

2) தாழ்த்தப்பட்டோர், பழங்குடி ஆணையங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது போன்ற அரசமைப்புச் சட்டப் படியான அதிகாரங்கள் பிற்படுத்தப்பட்டோர்க்கான ஆணையத்திற்கும் விரிவுபடுத்தப்படவேண்டும்.

3) சமூகங்களின், சமூக, பொருளாதார, கல்வியில் பின்னுக்குத் தள்ளப்பட்ட ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.

4) மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பொது நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட மத்திய அரசின் பணிகளில் இடஒதுக்கீட்டுக் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது பற்றிய ஒரு முன்னேற்ற அறிக்கை (Status Report) தயாரித்து அளிக்கப்படவேண்டும்

5) மத்திய கல்வி நிறுவனங்களில், குறிப்பாக அய்.அய்.டி., அய்.அய்.எம்., ஏ.அய்.எம்.எஸ்., ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், டில்லி பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது பற்றிய உண்மை அறிக்கை (Status Report) தயாரித்து அளிக்கப்படவேண்டும்.

6) மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பொது நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட மத்தியஅரசின் பணிகளில், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படாமல் விடுபட்டுப் போன பணியிடங்களில் விரைவில் அவர்களைக் கொண்டு நியமனம் செய்ய வேண்டும்.

7) பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் சமூகப் பொருளாதார நிலையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அவர்களின் நலனுக்காக போதுமான அளவு நிதி மத்திய அரசின் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட வேண்டும்.

தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு

8) மண்டல் குழுப் பரிந்துரைகள், கீழ்க்குறிப் பிடப்பட்ட இனங்களையும் சேர்த்து, முழு அளவில் நடைமுறைப் படுத்தப்படவேண்டும்.

அ) தனியார் துறையில் இட ஒதுக்கீடு

ஆ) பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இட ஒதுக்கீடு

9) பிற்படுத்தப்பட்டோர்க்கான இட ஒதுக்கீடு வழங்குவதில் கடைப்பிடிக்கப்படும் வருமான வரம்பு அளவுகோல் கைவிடப்படவேண்டும்.

10) இதர வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகங்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் இடஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள 50 விழுக்காடு வரையறை நீக்கப்பட வேண்டும்.

- இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

http://viduthalai.in/new/home/archive/4679.html

0 comments:

Post a Comment