சென்னையில் நேற்று நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் ஆறு நறுக்கான தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. அதில் இரண்டாவது தீர்மானம் நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவையின் 14ஆவது தேர்தல் குறித்த முக்கிய தீர்மானமாகும்.
தி.மு.க. ஆட்சியைப் பொறுத்தவரை பெருஞ் சாதனைகளின் பட்டியல் என்ற பலத்தோடு வாக்காளர்களைச் சந்திக்க உள்ளது.
அ.இ.அ.தி.மு.க தலைமையில் இன்னொரு அணி; இந்த அணியின் தலைவரோ, கட்சியோ குறைந்தபட்சம் எதிர்க்கட்சி என்ற தகுதியோடு செயல்பட்டு இருக் கிறதா? சட்டசபையிலோ சட்டசபைக்கு வெளியிலோ அந்த வகையில் தன் கடைமையை ஆற்றியதாகக் கூற முடியாது.
தன் கட்சியும் உயிரோடு இருக்கிறது என்பதைக் காட்டி கொள்வதற்காக உப்புச் சப்பு இல்லாத ஆர்ப்பாட்டங்களை நடத்தி, போராட்டம் என்பதையே கொச்சைப்படுத்திய ஒரு செயலைத்தான் அது சாதித்துக் காட்டியிருக்கிறது.
அ.இ.அ.தி.மு.க. அணியில் அமைந்துள்ள கூட்டணிக் கட்சிகள் எல்லாம் இணைந்து தமிழ்நாட்டில் போராட்டத்தை அறிவித்தன.
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெய லலிதாவைத் தவிர மற்ற கட்சிகளின் தலைமைப் பொறுப்பாளர்கள் நேரிடையாகப் பங்குபெற்றனர். இது பற்றி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் தா.பாண்டியன் அவர்களை செய்தியாளர்கள் கேட்டபோது, இது சில பேருடைய குணங்கள் அப்படி என்று நறுக்குக் குட்டு ஒன்றை வைத்தார்.
ஒரு ஜனநாயக நாட்டில் ஜனநாயக ரீதியாகக் கட்சி நடத்தும் தலைவராக ஜெயலலிதா எப்பொழுதுமே நடந்து கொண்டதில்லை. பொறுப்புடன் செயல்பட வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் மாதக்கணக்கில் கொடநாடு பங்களாவில் ஓய்வு எடுத்துக்கொள்வார்.
அ.இ.அ.தி.மு.க.வோடு இப்பொழுது கூட்டுச் சேர்ந்துள்ள இடதுசாரிகள் 2001இல் அ.இ.அ.தி.மு.க. வோடு கூட்டு வைத்து வெற்றி பெற்றதுண்டு. வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த ஒரு சில மாதங்களுக் குள்ளாகவே இடது சாரிகளைப் புறக்கணித்து அவமதித்து வெளியேறச் செய்தார் ஜெயலலிதா என்ற கசப்பான உண்மையை இடதுசாரிகள் எளிதாக மறந்துவிட முடியாது - முடியவே முடியாது.
முதலமைச்சர் என்ற முறையில் ஜெயலலிதாவை கட்சித் தலைவர்கள் சந்திப்பது என்பது எல்லாம் அவ்வளவு சாதாரணமானதல்ல. போயஸ் தோட்டத்திலிருந்து தலைமைச் செயலகத்துக்கு புறப்பட்டார் என்றால் அவ்வளவுதான் மணிக்கணக்கில் போக்குவரத்துப் பாதிப்பு!
அலுவலகங்களுக்குச் செல்லக்கூடியவர்கள், கல்வி நிறுவனங்களுக்குச் செல்லக்கூடியவர்கள், அவசர அவசரமாக மருத்துவமனைகளை நோக்கிச் செல்லக்கூடிய நோயாளிகள் அத்தனைப் பேரும் ஜெயலலிதா அம்மையாரைச் சபித்துக் கொட்டு வார்கள் என்பதையெல்லாம் மறக்கத்தான் முடியுமா?
இவை எல்லாவற்றுக்கும் மேலாக மதச் சார்பின்மைக் கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர் - அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மை கொண்டவர் அவர்.
பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான கரசேவைக்கு ஆதரவு தெரிவித்தவர் இவர். இராமன் கோயிலை அயோத்தியில் கட்டாமல் வேறு எங்கு போய்க் கட்டுவது என்ற வினாவை எழுப்பியவர்.
உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று அடையாளங் காட்டப்பட்ட நரேந்திரமோடி முதல் அமைச்சராகப் பதவியேற்ற விழாவில், தனி விமானத் தின் மூலம் சென்றவர் இந்த ஜெயலலிதாதான். ஒரே ஒரு முதல் அமைச்சரும் இவரே, இவரே!
மதச்சார்பற்ற தன்மையின் அஸ்திவாரத்தைத் தகர்க்கும் -சிறுபான்மை மக்களை ஈவு இரக்கமற்ற முறையில் கொன்று குவித்த அந்த இடிஅமீனை போயஸ் தோட்டத்துக்கு அழைத்து, நல்ல வரவேற்புக் கொடுத்து வித விதமான, வகை வகையான பதார்த்தங்களுடன் விருந்து படைத்தவரும் இந்த ஜெயலலிதாதான்.
ஆர்.எஸ்.எசுக்கு மிகவும் விருப்பமான மதமாற்றத் தடை சட்டத்தைக் கொண்டு வந்த மாமணி (?) யும் இவரே!
பெரியார், அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டே அவர்களின் கொள்கைகளுக்குக் குழி வெட்டும் குலதர்மக் கொழுந்து இவர்.
இத்தகைய ஒருவர் தலைமையில் ஆட்சி அமைவது - அமையச் செய்வது கொள்ளிக் கட்டையை எடுத்து தலையில் சொரிந்து கொள்வது ஆகாதா?
முதலில் யார் வரக்கூடாது என்பதிலே நம் வாக்காளர்ப் பெருமக்களுக்குத் தெளிவு இருக்க வேண்டும். அந்த வகையில் திராவிடர் கழகப் பொதுக்குழு சரியான வழிகாட்டுதலைச் செய்துள்ளது.
தமிழின வாக்காளர்கள் சிந்திப்பார்களாக!

0 comments:
Post a Comment