Tuesday, October 4, 2011

மறைக்கப்பட்ட தமிழர் தலைவரின் சாதனைக் களம் (2)

நெய்வேலி - திராவிடர் கழக சாதனை ஓட்டத்தில் ஒரு மைல் கல்
மறைக்கப்பட்ட தமிழர் தலைவரின் சாதனைக் களம் (2)

- முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்


தமிழகத்தில் எடுக்கப்படும் பெட்ரோல், நிலக்கரிக்கு மத்திய அரசு ராயல்டி வழங்கவேண்டும் எனும் கோரிக்கையைத் தமிழகத்தில் முதன் முதலாக எழுப்பியது திராவிடர் கழகம். சுவர்களில் எல்லாம் எழுதி வைத்தது. தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பி வைத்தது. அசாம் மாநிலத் தில் எடுக்கப்படும் எண்ணெய்க்கு மய்ய அரசு ராயல்டி தரும்போது தமிழகத்தை மட்டும் வஞ்சிப்பது என்ன நியாயம் என்று கேட்ட ஒரே இயக்கம் திராவிடர் கழகம்.

1989 இல் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தலைவர் கலைஞர், முதல்வர் கலைஞர் தமிழகத்தின் உரிமைக்குக் குரல் கொடுத்தார். அதற்கு முன்னர் உறவுக்குக்கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம் எனும் தத்துவத்தின் அடிப்படையில் மாநில சுயாட்சித் தத்துவத்தை வழங்கிய மாமனிதன் அண்ணாவின் பெயரிலே கட்சி, அண்ணாவின் படம் போட்ட கொடி கொண்ட எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களின் அரசு திராவிடர் கழகத்தின் இந்த உரிமைக் கோரிக்கையை கவனிக்கவில்லை. காதில் போட்டுக் கொள்ளவில்லை என்பதும் வரலாற்று உண்மை.

பொறுத்துப் பார்த்த தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் - கோரிக்கை விடுத்துப் பார்த்த ஆசிரி யர் அவர்கள் - சமூக சீர்திருத்த இயக்கமாம் திராவிடர் கழகம் பொரு ளாதார உரிமைக்கும் குரல் கொடுப் பதோடு நிறுத்திக் கொள்ளாமல் போராட்டக் களத்திலும் இறங்கும் என முதல் அறிவிப்பினை 3-9-1989 அன்று ராமநாதபுரம் பொதுக்கூட்டத் தில் அன்றைய கழகப் பொதுச் செய லாளர் என்ற நிலையில் அறிவித்தார்.

தமிழகம் எப்படி எல்லாம் வஞ்சிக் கப்படுகின்றது என்பதை ராமேசு வரத்தில் சுற்றுப்பயணம் ஆரம்பித்துத் திருத்தணி வரையிலே சொன்னோம். அசாமிலே மாணவர்கள்தான் ஆட்சி செலுத்துகின்றார்கள். அசாமிலே எடுக்கப்படுகின்ற எண்ணெய்க்கு ஈட்டுத் தொகை (ராயல்டி) வேண்டு மென்று அசாமியர்கள் கேட்டார்கள்.

மத்திய அரசு அவர்களுக்கு ஈட்டுத் தொகையையும் வழங்கியது. தமிழ் நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் உள்ள நரிமணத்திலே உலகிலேயே உயர்ந்த ரகப் பெட்ரோல் கிடைக்கின்றது. அதே போல் நாகப்பட்டினத்திற்குப் பக்கத்தில் கோயில் களப்பால் என்ற இடத்திலே பெட்ரோல் கிடைக்கின்றது. மத்திய அரசேஅசாமுக்குக் கொடுக் கும் ராயல்டி தொகையைப் போலத் தமிழ்நாட்டு அரசுக்கும் கொடு என்று முதலில் போராடிக் கேட்டஇயக்கம் திராவி டர் கழகம் என்பதை யாரும் மறந்து விடாதீர்கள். அதை நாங்கள்தான் எடுத் துச் சொன்னோம்.

கலைஞர் அவர்கள் தமிழகத்தினுடைய ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடனேயே மத்தியஅரசைப் பார்த்து முதலில் இதைத்தான் கேட்டார் . . . திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையிலே இந்த மாத இறுதிக்குள் எங்களுடைய கழக இளைஞர்கள், கழகத் தோழர்கள், தாய்மார்களைக் கொண்டு இரண்டு இடங்களிலே ஆர்ப்பாட்டத்தை இதற்காக நடத்த விருக்கிறோம்.

ஒன்று நரிமணத்திற்குப் பக்கத்திலே ஆர்ப்பாட்டம்! இன்னொற்று நெய்வேலிச் சுரங்கத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்! ராயல்டி தொகையை உடனடியாக மத்திய அரசே! தமிழக அரசுக்கு வழங்கு என்பதை வற்புறுத்துவோம்.

(விடுதலை 5-9-89)

பெரியார் வழிவந்த கழகப் பொதுச் செயலாளர் - வன்முறையற்ற - அமைதிப் போராட்டம் நடத்தப் பெறும் - ஆர்ப்பாட்டம் என்று அறிவித்துவிட்டார். நாளை அறிவிக்கவில்லை. போர் முழக்கத்தை ஊதுகுழல் எடுத்து ஊதிவிட்டார். செவி டர் காதில் கேட்கும்படியாகப் போராட்டச் சங்கு முழக்கத்தை முழங்கினார்.

மேடை முழக்கம் மட்டுமில்லை. விடுதலை (11-9-89 இல்) தலையங்கமும் தீட்டித் தனது இயக்கத்தின் அறிவாயு தத்தைத் தீட்டியது. பிரச்சினையின் ஆழத்தை, மய்ய அரசின் துரோகத்தை - மாற்றாந்தாய் மனப்போக்கை வெளிச்சம் போட்டுத் தமிழ் இன உணர்வுடன் - தமிழ்நாடு என்னும் உயர்ந்த நாட்டுணர் வுடன் தீட்டப்பட்ட தலையங்கத்தின் கூர்வாள் வாசகங்கள் இவை;

நெய்வேலியில் எடுக்கப்படும் நிலக் கரியின் விற்பனை மதிப்பில், ஒரு டன்னுக்கு 10 சதவிகிதம் ராயல்டியாகத் தரவேண்டும் என்பது தமிழக அரசின் கோரிக்கை. ஆனால் இதை மத்திய அரசு ஏற்க மறுப்பதோடு நிலக்கரிக்கு ராயல்டி வழங்கப்பட்டால் தமிழகத்துக்குத் தரப்படும் மின்சாரத்தின் கட்டணத்தை உயர்த்து வோம் என்கிறது. நெய்வேலியில் எடுக்கப்படும் நிலக்கரியைக் கொண்டு மின்சாரம் மட்டும் உற்பத்தி செய்யப் படுவதில்லை. பல்வேறு ரசாயனப் பொருள்களும் உற்பத்தி செய்யப்பட்டு அவை தொழில் நிறுவனங்களுக்கு விற்கப்படு கின்றன.

அந்த ரசாயனப் பொருள்களுக்கு எல்லாம் விலையை ஏற்றாமல் மின்சாரத் துக்கு மட்டும் கட்டணத்தை ஏற்றுவோம் என்பது என்ன நியாயம்? அதுமட்டு மல்லாமல் நெய்வேலியில் எடுக்கப்படும் மின்சாரம் தமிழகம் உட்பட வேறு பல மாநிலங்களுக்கும் விற்கப்படுகிறது. இதில் தமிழகத்துக்கு மட்டும் மின்சாரக் கட் டணத்தை உயர்த்தப் போவதாக மத்திய அரசு கூறுவது அதன் பழி வாங்கும் உணர் வைத்தான் வெளிப் படுத்துகிறது.

லாபத்தில் பங்கு கொடுப்பது என்பது வேறு; ராயல்டி என்பது வேறு; இரண்டை யும் ஒன்றாகச் சேர்த்து ஏன்குழப்ப வேண் டும்? தமிழகத்திலிருந்து எடுக்கப்படுகிற கனிமவளத்துக்குத்தான் நாம் ராயல்டி கேட்கிறோம். எனவே,பெட்ரோலும், நிலக் கரியும் எப்போது எடுக்க ஆரம்பித்தார் களோ, அது முதல் கணக்கிட்டு, ராயல்டி தொகையை மத்திய அரசு வழங்குவதுதான் நியாயம். அதைச் செய்யாமல் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் லாபம் ஈட்டத் தொடங் கிய காலத்துக்குப் பிறகுதான் ராயல்டி தருவோம் என்பது தமிழ்நாட்டை ஏமாற்று வதாகும்.

இந்த ராயல்டி தொகை பற்றி இறுதி முடிவு எடுக்கக் கூடியது பிரதமர் அமைச் சகம்தான். பிரதமர் அமைச்சகத்தைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. முழுதும் பார்ப்பனஆதிக்கம் அங்கே புழுத்து நெளிந்து கொண்டிருக்கிறது. இவர்கள் தமிழ்நாட்டின் இந்த உரிமைக் குரலுக்கு முட்டுக்கட்டைபோட்டு, பிரச்சினையைக் கிடப்பில் போடத்தான் திட்டங்களைத் தீட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இப்போது நெய்வேலி நிலக்கரி வாரியம் என்ற பெயரையும் மாற்றிவிடப் பார்ப்பன அதிகார வர்க்கம் தந்திரமாகத் திட்டமிட்டிருக்கிறது. நெய்வேலி என்ற பெயர் இருப்பதால் அதில் தமிழ்நாடும் பிரிக்க முடியாத அங்கமாகிவிடுகிறது என்பதால் அதில் இந்தியஅளவில் நிலக்கரி வாரியம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறார்கள்! அகில இந்தியா என்பது தானேஅவாளின் பாதுகாப்புக் குகை! அனைத்தையும் அகில இந்தியாவாக்கி விட்டால் பார்ப்பன மயமாக்குவது எளிதாகிவிடுகிறது! காரணம், இந்த நாட்டில் அகில இந்தியா என்பதன் பொருள் சர்வம் பார்ப்பன மயம் என்பதுதான்!

(விடுதலை தலையங்கம் 11-9-89)

விடுதலை உரிமைப் போராட்டத்தில் பார்ப்பனீயத்தின் சூழ்ச்சிகளை அம்பலப் படுத்தி, தமிழர்களிடையே உரிமை உணர்வைத் தட்டி எழுப்பும் வகையில் உரிமைக் கிளர்ச்சியில் இறங்க அறிவிப்பு விடுத்தது.

ஆதரவு திரட்டுதல்

தமிழர்தலைவர் போராட்ட அறிவிப்பு விட்டுவிட்டுப் பின்வாங்கும் வெத்து வேட்டு வீரர் அல்லவே. 5-9-11 இல் போராட்ட அறிவிப்பு விட்ட கையோடு நெய்வேலி நிலக்கரிக்கு ராயல்டி கோரி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத் திற்குத் தென் ஆர்க்காடு மாவட் டத்தைத் திரட்டினார்.

தென் ஆர்க்காடு வடக்கு மாவட்டத் திராவிடர் கழகக் கமிட்டிக் கூட்டம் 7-9-89 இல் விக்கிரவாண்டி தண்டபாணி இல்லத்தில் கூடியபோது, ஆசிரியர் அவர்கள் தலைமை வகிக்க, தென் ஆர்க்காடு மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் பி. ஞானம் வரவேற்க, கூட்டம் தொடங்கியது.

இந்தக் கூட்டத்தில் புலவர் ஜானகி ராமன், வைத்தியலிங்கம், பண்ருட்டி அரங்கநாதன், திண்டிவனம் தாஸ், மைம் ராவணன், விக்கிரவாண்டி குளிர் நீரான், முத்தமிழ் தாசன், ரவிச்சந்தி ரன், கார்வண்ணன், திருக்கோயிலூர் ஆறுமுகனார், சுப்பிரமணி, திண்டிவனம் சம்பந்தம், கெடார் நடராசன், ஆ. வந்தியத்தேவன், இன்றைய தி.க. பொதுச் செயலாளர் அன்றைய தி.க. இளைஞரணி செயலாளர் வீ. ஞானம், இரா.கஜேந்திரன், அய்யா சாமிதுரை ஆகியோர் உரையாற்றியபின் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றியுள்ளார்.

இக்கூட்டத்தில் நிறைவேறிய நெய்வேலி தொடர்பான தீர்மானம் இது:

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் திற்கு முன்பு நடைபெறுகின்ற ஆர்ப்பாட் டத்திற்கு இம்மாநாட்டி லிருந்து பெருந் திரளாகக் கலந்து கொள்வதென்று கமிட்டியில் ஏகமன தாக முடிவெடுக்கப் பட்டது.

மதியம் 12 மணிக்குத் தொடங்கிய இக்கூட்டம் மாலை 4 மணிவரை நடை பெற்ற போது நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்டம் முழுக்க இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு வந்திருந்து கருத்துகளை எடுத்துரைத்த மக்களாட்சிப் பாங்கும் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று.

(வளரும்)

0 comments:

Post a Comment